search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபால் பார்கவா"

    மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார்.

    230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

    இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா (பாஜக) கூறியதாவது:-


    மத்திய பிரதேச சட்டமன்ற சிறப்பு அமர்வை விரைவில் கூட்டும்படி கவர்னருக்கு கடிதம் எழுத உள்ளேன். விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அரசின் ஸ்திரத்தன்மையை  சோதிக்கவும் விரும்புகிறோம்.

    முடிவுகள் எடுப்பதிலும், நிதி விவகாரங்களிலும் இந்த பலவீனமான காங்கிரஸ் அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை சோதிக்க விரும்புகிறோம். அரசு  மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எந்த முயற்சியையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×